என்னடா நம்ம blog ஒரே monotonous-ஆ போகுதே, என்ன பண்ணலாம்னு யோசிச்சி, சரி எதைப்பற்றியாவது என்னுடைய கருத்தை எழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஆனா
எனக்கு எதை பற்றியுமே ஒரு நிலையான கருத்து கிடையாது. என்னுடைய கருத்துக்கள் மாறிக்கொண்டேயிருப்பவை. நான் பார்ப்பது, கேட்பது, படிப்பது, உணர்வது, அனுபவிப்பது ஆகியவற்றை பொருத்தும், என் பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை, attitude, சுற்றியுள்ள மனிதர்கள், இன்னபிற விஷயங்களை பொறுத்து அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த விஷயத்தில் இதுதான் என் கருத்து என்று எதையுமே என்னால் முடிவாக சொல்ல முடியாது.
எது சரியான கருத்து என்பதிலும் எனக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு விஷயத்தை பற்றியே என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான கருத்துக்கள் உண்டு. இதில் எந்த கருத்தை தேர்வு செய்து என்னுடைய கருத்தாக சொல்வது என்பதில் இன்னும் குழப்பம்.
கருத்து இருக்கு என்பதானாலேயே என்னால் எல்லா இடத்திலும் அதை சொல்ல முடிகிறதா என்ன?. எல்லோரிடமும் என்னை நல்லவனாக காட்டிக்கொள்வதற்காக நான் திரித்து சொல்லும் கருத்துக்கள், நண்பர்கள் மனம் கோனக்கூடாது என்பதற்க்காக அவர்கள் சொல்வதையே என்னுடையதாய் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கள், என்னைவிட வலியவருடன் பகைமை வளர்த்துக்கொள்ளாமல் இருக்க நான் சொல்லாமலே விட்டுவிடும் கருத்துக்கள் என ஆயிரம் சந்தர்ப்பங்களில் என்னுடைய கருத்து வேரு வேரு உருவம் மாற்றிக்கொள்ளும்.
பல நேரங்களில் கருத்து சொல்வதோடு என் கடமை முடிந்துவிடுகிறது. குழந்தை தொழிலாளிகள் கூடாது என்பதுதான் என் கருத்தும். ஆனால் உணவகம் சென்று உணவருந்தும்போது வந்து மேஜை துடைக்கும் சிறுவர்களை பார்த்துவிட்டும் அமைதியாகத்தான் வீடு திரும்புகிறேன், ஒவ்வொருதடவையும்.
எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்,
கருத்து சொல்பர்களும், கருத்து கேட்பவர்களும் அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்ற கவலையில்லாதவர்கள். அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று யோசிப்பவர்கள் கருத்து சொல்வதுமில்லை, அவர்களிடம் கருத்து கேட்கப்படுவதுமில்லை.
மனசாட்சி: இப்பவே கண்ண கட்டுதே. உன்னோட blog-யும் படிக்கறாங்க பார் அவங்களை சொல்லனும்டா